Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Tuesday, July 3, 2007

தனித்தளத்தில் வலைப்பதிவு தொடங்குவது எப்படி?

முதலில், தனித்தளம் தொடங்க தேவையானவை இரண்டு:

1. ஒரு தள முகவரி (Domain name)
2. வலையிட வழங்கி (Web space hosting)

இவ்விரண்டையும் எங்கு பெறுவது?

Godaddy போன்ற தளங்களில் மேற்கண்ட இரண்டு சேவைகளுக்கும் பதிந்து கொள்ளலாம். இல்லை, domain registration, web hosting என்று கூகுளில் தேடினால் பல முடிவுகள் கிடைக்கும். அல்லது, தமிழ் வலைப்பதிவுலகில் தனித்தளம் வைத்திருப்பவர்கள் பட்டியலை இந்தப் பதிவிலும் அதற்கு வந்த பின்னூட்டங்களிலும் காணலாம். அவர்களில் உங்கள் நண்பர்களை அணுகியும் அவர்கள் பயன்படுத்தும் சேவை குறித்து அறியலாம்.

இவற்றைப் பெறுவது எளிதா?

ஒரு மின்மடல் கணக்கு தொடங்குவது போல் எளிதாகச் செய்யலாம். நுட்ப அறிவு தேவை இல்லை.

இவற்றைப் பதிய எவ்வளவு நேரம் ஆகும்?

10 நிமிடங்களுக்குள் செய்து விடலாம். தளம் பொதுப் பார்வைக்கு வர ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டி வரலாம். இது எல்லாருக்கும் வரும் வழமையான தாமதமே.

எவ்வளவு செலவாகும்?

தளப் பெயர் பதிய ஆண்டுக்கு குறைந்தது 300 இந்திய ரூபாய் செலவாகும். வலையிட வழங்கியின் சேவையைப் பெறுவதற்கு ஆண்டுக்குக் குறைந்தது 150 இந்திய ரூபாயே கூட போதும். என்னுடைய வலையிட வழங்கி எனக்கு ஆண்டுக்கு 100 MB இடமும் மாதத்துக்கு 1 GB தரவுப் பரிமாற்ற அளவும் வழங்குகிறது. இதற்கு ஆண்டுக்கு சுமார் 1,000 இந்திய ரூபாய் செலவிடுகிறேன். எனினும், இதை விட விலை குறைவாகவும் இடம் அதிகமாகவும் பல சேவைகள் இருக்கக்கூடும். தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். எவ்வளவு இடம் வேண்டும் என்பதை உங்கள் பதிவின் அளவு, நீங்கள் சேமித்து வைக்கும் ஒலி, ஒளிக்கோப்புகளின் அளவு, வாசகர் வருகை அளவு பொறுத்து முடிவெடுக்க வேண்டும்.

எப்படி பணம் கட்டுவது?

பன்னாட்டு நிறுவனச் சேவைகள் கடன் அட்டை, Paypal மூலமே பணம் பெற்றுக் கொள்ளும். சேரும் போதே இத்தனை ஆண்டுகளுக்குத் தேவை என்று சொன்னால் அதுவே ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளும். இல்லையென்றால், நீங்கள் நினைவு வைத்து ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள வலையிட வழங்கிச் சேவைகள் இந்திய வங்கிக் கணக்குகள், காசோலைகள், money orderகள் மூலமோ நேரடியாக காசாகப் பெற்றுக் கொண்டோ கூட இந்த சேவையை அளிக்கலாம். கடன் அட்டை இல்லாதவர்களுக்கு இந்த வசதி உதவும். எடுத்துக்காட்டுக்கு, http://www.webspace2host.com கடன் அட்டை இல்லாமலும் பணம் செலுத்தும் வசதிகளை அளிக்கிறது.

வலையிட வழங்கிக்குச் செலவு செய்யாமல் தனித்தள முகவரியில் பதிவிட முடியுமா?

முடியும். தளப் பெயரை மட்டும் பதிந்து கொண்டு ப்ளாகர் தரும் இலவச இடத்திலேயே உங்கள் வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்த முடியும். எடுத்துக்காட்டுக்கு, http://blog.arutperungo.com/ பாருங்கள். இது குறித்த ப்ளாகர் உதவிக் குறிப்பைப் பாருங்கள். ப்ளாகரின் வசதிகள், இடைமுகப்பு பிடித்துப் போய் வேறு சேவைகளுக்கு மாற விரும்பாதவர்கள் இதைப் பயன்படுத்தலாம். எனினும், இந்த இலவச சேவையில், உங்கள் பதிவு முகவரி, தளத்தில் பிற சேவைகள் நிறுவுவது குறித்த கட்டுப்பாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, சொந்தமாக வலையிட வழங்கிச் சேவை பெற்று அங்கிருந்தும் ப்ளாகர் மூலம் பதியலாம்.

தனித்தளத்தில் வலைப்பதிய உகந்த மென்பொருள் எது?

தனித்தளத்தில் வலைப்பதிய பலரும் பரிந்துரைக்கும் மென்பொருள் Wordpress. இது ஒரு கட்டற்ற மென்பொருள் என்பதால் இலவசமாக நிறுவிக் கொள்ளலாம். இதை நிறுவிக் கொள்வதும் இலகுவே. நுட்ப அறிவு தேவை இல்லை. உங்கள் தளத்தின் கட்டுப்பாட்டகத்தில் உள்ள கருவிகளைக் கொண்டு 5 நிமிடங்களுக்குள் நிறுவிக் கொள்ளலாம். ப்ளாகருக்குப் பழகியவர்கள் wordpress இலகுவா என்று தயங்கத் தேவை இல்லை. ஒரு மணி நேரம் துழாவிப் பார்த்தாலே wordpress இயங்கும் முறையைப் புரிந்து கொள்ளலாம்.

தனித்தளத்துக்கு என் பழைய இடுகைகளை இடம்பெயர்க்க இயலுமா?

முடியும். ப்ளாகர், wordpress.com போன்ற சேவைகளில் உங்கள் இலவச வலைப்பதிவுகளில் உள்ள இடுகைகள், பின்னூட்டங்கள் ஆகியவற்றை இடம்பெயர்த்து உங்கள் பதிவில் இடலாம். இதைச் செய்வதும் இலகுவே. நுட்ப அறிவு தேவை இல்லை. உங்கள் பதிவின் அளவைப் பொறுத்து 5 முதல் 30 நிமிடங்கள் ஆகலாம்.

தனித்தளத்தில் பதிந்தால் திரட்டிகளில் இணைய முடியுமா? தமிழ்மணத்தில் பின்னூட்டம் திரட்டடப்படுமா?

முடியும். தனித்தளத்தில் wordpress நிறுவிச் செயல்படுபவர்களுக்கான கருவிப்பட்டையைத் தமிழ்மணம் வழங்குகிறது. இதை இலகுவாக சேர்த்துக் கொள்வதற்கான பொருத்தை இங்கு பெறலாம். இதனால், தமிழ்மணத்தில் பின்னூட்டங்கள் திரட்டப்படுவதிலும் பிரச்சினை இருக்காது.

தனித்தளத்தில் வலைப்பதிவதால் என்ன இலாபம்?

சொந்த வீட்டில் இருக்கும் ஒரு சந்தோஷம், அடையாளம் தான் :) உண்மையில், தனித்தளத்தில் பதிவதால் உங்கள் பதிவு மீதான கூடுதல் கட்டுப்பாடு உங்களுக்குக் கிடைக்கும். எரிதப் பின்னூட்டங்கள், விரும்பத் தகாத பின்னூட்டங்களைத் தவிர்க்கலாம். வாசகர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எப்பொழுது வருகிறார்கள், எதைப் படிக்கிறார்கள், எவ்வளவு நேரம் தங்குகிறார்கள் போன்ற துல்லியமான புள்ளி விவரங்கள் கிடைக்கும். வலைப்பதிவு போக பிற மென்பொருள்கள், சேவைகளை உங்கள் தளத்தில் நிறுவிப் பார்க்கலாம். வலைமனையாகவும் பயன்படுத்தலாம். நிறுவனங்கள் வைத்திருப்போர் தங்கள் நிறுவனத்துக்கான வலைப்பதிவை சொந்தத் தளத்தில் நிறுவுவது கூடுதல் நம்பகத்தன்மையையும் தோற்றத்தையும் தரும். உங்கள் பெயரில் அமைந்த தனி மின்மடல் முகவரியும் கிடைக்கும்.

- ரவி

15 comments:

Anonymous said...

ஓசை செல்லா போன்றவர்களை அனுகினால் வலைத்தளங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அவர் இதுபோன்றதொரு பணியில் இருக்கிறார் என்று கேள்வி.

துளசி கோபால் said...

ரொம்ப நன்றிங்க. விவரங்கள் தெளிவாகத்தான் கொடுத்துருக்கீங்க. நானும் ஒரு
இடத்தை எடுத்து ரெண்டு வருஷமாகுது. பேரை மட்டும் பதிவு செஞ்சு வச்சிருக்கேன்.

இனிமேல்தான் அங்கே போறதுக்கு ஏற்பாடு செஞ்சுக்கணும். நீங்க சொல்றதைப்பார்த்தால்
சுலபமாத்தான் இருக்கு. முயற்சிக்கிறேன்.

பகீ said...

வலைப்பதிவிற்கான இடத்தை வாங்கிறனியள் unlimited bandwith இருக்கிறதா வாங்கிப்போட்டியள் எண்டா நல்லது இப்பவே சொல்லிப்போட்டன். பிறகு நீங்கள் இணையத்தில புலியாகின பிறகு உங்களுக்கு bandwith காணாம பிரச்சனை வரும்.

முக்கயிம் என்னெண்டா பிறகு படங்கள் கோப்புகளை வேற இலவச வழங்கிகளில இருந்து பயன்படுத்த வேண்டிய தேவையும் வரலாம். (அதுகும் நல்லம்தான்).

Deepa said...

ரொம்ப அருமையா question -answer பாணியில் சொல்லியிருக்கீங்க..வாழ்துக்கள்

தமிழ்பித்தன் said...

அண்ணா எனக்கொரு சந்தேகம் சரி நிலம் வாங்கி (web space மற்றும் domain) சொந்த வீடு(wordpress) கட்டியாகி விட்டது வேறு நல்ல நிலம் கிடைக்கின்ற போது எந்த சேதமும் இல்லாமல் வீட்டை மற்ற நிலத்துக்கு மாற்ற முடியுமா? முதல் வாங்கிய தளத்துக்கு back up வசதி இருக்குகிறது பதிவுகளில் எந்த இழப்பும் இன்றி அதே wordprss ஐ backup செய்து மற்ற தளத்தில் பொருத்த முடியுமா இல்லை ஒவ்வொரு பதிவாகத்தான் ஏற்ற வேண்டுமா?(நீங்கள் சரி என்றால் நான் இப்பவே பரிசார்த்த வீட்டுக்கு போக)

Mugundan | முகுந்தன் said...

பயனுள்ள தகவல்கள்.
மிக்க நன்றி,ரவி.

அன்புடன்,
முகு

Anonymous said...

அது சரி, தளத்துக்கு ஏதோ ஒரு காரணத்தால் பணம் கட்ட முடியாமல் போய் விட்டால் என்ன நடக்கும். தளம் காணாமல் போய் விடுமா? கூடவே எங்கள் பதிவுகளும் காணாமல் போய் விடுமா? இப்படி முகவரி இழந்த தனிப்பட்ட பதிவுகளைக் கண்டிருக்கிறேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

anonymous 1 - எ-கலப்பை உருவாக்கிய முகுந்தும் வலையிட வழங்கிச் சேவை வழங்குகிறார். அவரையும் அணுகலாம்.

பகீ - unlimited bandwidth நல்ல யோசனை தான். ஆனா, அதிக செலவு ஆகலாம். ஒலி, ஒளி, புகைப்படக் கோப்புகளை வேறு தளங்களில் பதிவேற்றி இணைப்பது bandwidthஐ சேமிக்க உதவும்.

தமிழ்பித்தன் - அனுபவப் பூர்வமாக உங்கள் கேள்விக்குப் பதில் இல்லை, எனினும், ஒரு வலையிட வழங்கியில் இன்னொரு வழங்கிக்கு எந்த சேதமும் இன்றி நகர்த்த இயலும் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு இடுகையாக நகர்த்தத் தேவை இல்லை. மொத்தமாகவே நகர்த்தும் வசதிகள் wordpress, sql போன்றவற்றில் உண்டு.

anonymous 2- பணம் கட்டாமல் விட்டால் பதிவும், தளமும் அணுக முடியாமல் போகும். திரும்பிப் பணம் கட்டிப் புதுப்பிக்கும் இடைப்பட்ட காலத்தில் உங்கள் பதிவின் பெயரை இன்னொருவர் பதிந்திருந்தால் அதே பெயரில் தளம் தொடங்க இயலாமல் போகலாம். காணாமல் போன தரவுகள், பதிவுகள் அனைத்தும் அப்படியே திரும்பக் கிடைக்குமா என்பதில் எனக்கு அனுபவப்பூர்வமாகத் தெரியாது. அறிந்தவர் சொல்லலாம். எனினும் தளத்தை நடத்தி வருகையிலேயே அதில் உள்ள கோப்புகளை அவ்வப்போது backup செய்து கொள்வது நல்லது

பகீ said...

தமிழ் பித்தன், ஒரு பிரச்சனையும் இல்லாம நகர்த்தலாம் முயற்சி பண்ணி பாருங்க. உங்கள் வழங்கி கட்டாயம் MySQL இல தான் இருக்கும்.

அனானி 2, பணம் கட்டாட்டி எல்லாம் இல்லாம தான் போகும் (அனுபவத்தில சொல்லுறன்). இருந்தாலும் கொஞ்சநாள் முதலே உங்களுக்கு அறிவிப்பாங்கள். அதோட உங்களுக்கு backup செய்யிற வசதிகளையும் அந்த சேவை பயனாளர்களே வழங்குவார்கள். அதனால சிக்கல் இல்லை. இதுகள் ஒண்டும் தெரியாத காலத்தில என்ர தளம் ஒண்டு மொத்தமா இல்லாம போனது.

Sivaram said...

ரவி,
நல்ல பதிவு..
கூகிள் முற்றிலும் இலவசமாக அருமையான வசதிகளுடன் வலையிடம் வழங்கி வருகிறது..
(வலைப் பெயர் பதிவு நம்ம பொறுப்பு)

விவரங்களுக்கு google apps (www.google.com/a) பார்க்கலாம்..

- உடுக்கை முனியாண்டி said...

ரவி,
புதிதாக துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல அறிமுகம். நன்றி

துளசி,

என்னதான் எளிமை,புதுமை, பெருமை என்றிருந்தாலும் டெக்னிக்கலாக
சமாளிக்கமுடியும் என்றால் மட்டும் புது இடத்தைப் பற்றி யோசியுங்கள்.ஒவ்வொருமுறை bug fixes மற்றும் updates வரும்போதும் நீங்களும் கட்டாயம் மாற்ற வேண்டியதிருக்கும். முழுக்க முழுக்க நண்பர்களை சார்ந்திருக்கவேண்டிய நிலை என்றால் இதைப் பற்றி யோசிக்காமல் இருப்பதே நல்லது. எனக்கு தெரிந்து நண்பர்களை சார்ந்து இருந்ததால் சில தளங்கள் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. அத்துடன் முக்கியமாக வோர்ட்ப்ரஸ்ஸிலிருந்து ப்ளாக்கருக்கு மீண்டும் மாறுவது எளிதல்ல.
தகவலுக்காக, அதிகமாக பார்வையிடப்படும இந்திய வலைப்பதிவு ப்ளாக்கரில் தான் இருக்கிறது.
http://labnol.blogspot.com
இதை எழுதும் அமித் அகர்வால் முழு நேர வலைப்பதிவாளர். அதனால் தனித்தளம் தான் identity கொடுக்கும் என்றெல்லாம் நம்ப வேண்டியதில்லை.

பகீ,
எல்லையில்லா bandwidth நிச்சயமாக தேவையில்லை. சாதரணமாக ஒரு பக்கம் என்பது அதிக பட்சமாக 500 kb (சாதரணமாக 50 kbயே அதிகம்) என்றாலும் உங்களுடைய தேவையை நீங்களே கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் இப்பொழுதிருக்கும் வழங்கிகள் தேவைக்கு அதிகமாகவே bandwidth வழங்குகிறார்கள். இதில் அடிக்குறிப்பு என்னவென்றால் இதில் ஒரு சிறு பகுதியைக்கூட யாரும் உபயோகிப்பதில்லை.


தமிழ்பித்தன்,

வோர்ட்ப்ரஸ் தளத்திலிருந்து வேறொரு வோர்ட்ப்ரஸ் தளத்திற்கு மாற்றுவது மிக எளிது. அதில் எந்த சிக்கலும் இல்லை.


சொந்தவீட்டில் சந்தோசம் என்பதெல்லாம் எந்தளவுக்கு சரி என்று சொல்லமுடியாது. என்னைப் பொருத்தவரை தொழில்நுட்ப ரீதியாக ஒருவரால் முடியும் என்றால் மாறுவதை பற்றி தாராளமாக யோசிக்கலாம். இல்லை என்றால் ப்ளாக்கரே மேலானது.

- உடுக்கை முனியாண்டி said...

ஜீவன்,

கூகுள் இன்னமும் வலையிட வசதியை வழங்க ஆரம்பிக்கவில்லை. அவர்கள் வழங்குவது இ-மெயில், காலண்டர், doc & spreadsheet மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வலைப்பக்கங்கள். இதை வலையிட வசதியாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

விரிவான விளக்கங்களுக்கு நன்றி, பகீ, உடுக்கை முனியாண்டி.

ஜீவன், கூகுள் சேவைகளை உங்கள் தளப்பெயரில் நிறுவக் கொள்ளவே google apps உதவும். கூடுதலாக நீங்கள் விரும்பும் மென்பொருள்களை நிறுவவோ கோப்புகளைச் சேமிக்கவோ வசதி இல்லாததால் கூகுள் செய்வதை வலை வழங்கிச் சேவையாகக் கருத இயலாது.

தமிழ்பித்தன் said...

அப்ப மாறிட வேண்டியதுதான் நல்ல விசயங்களை கண்டால் மாறுவதில் தப்பேதும் கிடையாது

Chandravathanaa said...

பயனுடையதாக இருக்கிறது. நன்றி