Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Thursday, April 26, 2007

அதியனும் தமிழ்விசையும்

லினக்சை பயன்படுத்தும் போது அளவிட முடியாத நன்மைகள் இருந்தாலும், பல குழுக்கள் சேர்ந்து உருவாக்கும் மென்பொருட்களின் தொகுப்பாக இருப்பதால் சில இடையூறுகளும் இருக்கும். எல்லோரும் ஒரே மாதிரியான தகுதரத்தைப் பயன்படுத்தா விட்டால் ஒரு பயன்பாட்டில் செயல்படும் முறை இன்னொன்றில் வேலை செய்யாது.

தமிழில் தட்டச்சிட அப்படி ஒரு நிலைமைதான் இருக்கிறது.

மேசைத் தளத்துக்கான படங்களை வரையும் மென்பொருளை அடிப்படையாகக் கொண்ட விசைப்பலகை, க்னோம் எனப்படும் மேசைத் தளத்தை அடிப்படையாகக் கொண்ட விசைப்பலகை என்று இரண்டுமே கிடைக்கின்றன.

முதலில் சொன்னதில் தமிழ்99 விசைப்பலகை மட்டும்தான் கிடைக்கிறது. மொசில்லா பயர்பாக்சு, அலுவலக மென்பொருட்கள், உரையாடல் கருவிகள் என்று எல்லாவற்றிலும் (எ-கலப்பை போல) பயன்படும். இதற்காகவே தமிழ்99 உள்ளீட்டு முறையைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

நமக்குத் தெரிந்தது ammaa என்று அடித்து அம்மா என்று வர வைக்கும் அஞ்சல் / தமிங்கில விசைப்பலகை தான் என்றால் மேலே சொன்னது உதவாது.

க்னோமின் உள்ளீட்டுக் கருவியின் மூலம் துரையப்பா வசீகரன் உருவாக்கிய கருவியில்
  • அஞ்சல் முறையில் ஒருங்குறி,
  • தமிழ்99 முறையில் டிஸ்கி,
  • தமிழ்99 முறையில ஒருங்குறி,
  • தமிழ்விசைப்பலகை என்ற முறையில் திஸ்கி,
  • தமிழ்விசைப்பலகை என்ற முறையில் ஒருங்குறி
ஆகிய தேர்வுகள் கிடைக்கின்றன. ஆனால் இந்த விசைப்பலகை க்னோம் பயன்பாடுகளில் மட்டும்தான் செயல்படும். தமிழில் எழுத க்னோம் உரைத்தொகுப்பி ஜிஎடிட் பயன்படுத்தி, அதிலிருந்து நகல் செய்து ஒட்டுவதன் மூலம்தான் பயர்பாக்சில் தமிழ் உள்ளிட முடிந்தது.

நண்பர் பாலபாரதியின் கணினியில் லினக்சை நிறுவும் போது அவர் தமிழ்விசை என்ற பெயரில் ஒரு பயர்பாக்சு நீட்சி கிடைப்பதாகவும் அதைப்பயன்படுத்தி நேரடியாக தமிழில் எழுதலாம் என்று சொல்லியிருந்தார். புதிய மடிக்கணினி வந்ததும், எல்லா மென்பொருளையும் அதிலிருந்தே பயன்படுத்த ஆரம்பித்திருந்தேன். இப்போது இந்த நீட்சியை நிறுவிக் கொள்ளலாம் என்று பாலாவை தொலைபேசிக் கேட்டால், அவர் அதியன் என்ற நீட்சியைத் தேடிப் பிடிக்கச் சொன்னார்.

'பேரை மாத்திட்டாங்களோ' என்று நினைத்துக் கொண்டே அதியனை ஹாய் கோபியின் வலைப்பதிவில் பிடித்து நிறுவிக் கொண்டேன். சரியாக விபரம் பார்க்காமல், பாலாவை நினைத்துக் கொண்டே குறுக்கு வழி விசைகளை அழுத்தினாலும் தமிழில் எழுத்து வர மாட்டேன் என்று அடம் பிடித்தது. வலது புறம் சொடுக்கி விபரம் பார்த்தால் அது பக்கங்களை திஸ்கியிலிருந்து யூனிகோடுக்கும் மாற்றும் நீட்சி.

திரும்ப தொலைபேசியதில், அலுக்காமல் தமிழ் விசை என்பதை நினைவு படுத்திச் சொன்ன பாலாவுக்கு நன்றியுடன் தமிழ் விசையையும் நிறுவிக் கொண்டேன். முகுந்தின் சத்தம் இல்லாத பணிகளில் இன்னொரு பலனுள்ள படைப்பு.

தமிழில் எழுத நீட்சியைத் தேடப் போய் திஸ்கி பக்கங்களைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்து விட்டது. அப்படியே என் பெயரை கூகுளில் தேடியதில் ஆறு ஆண்டுகள் முன்பு எறும்புகள் குழுவின் சார்பில் இணையத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து உரையாடியதின் தொகுப்பு திஸ்கியில் கிடைத்தது, அதை ஒருங்குறிக்கு மாற்றி சேமித்து வைத்துக் கொண்டேன்.

பயர்பாக்சில் தமிழில் எழுத தமிழ்விசை (tamilkey), பயர்பாக்சின் திஸ்கி பக்கங்களை ஒருங்குறியில் படிக்க அதியன். என்ன? பயர்பாக்சு இல்லையா? இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் எப்படி என்று தெரிய வேண்டுமா? இதற்கு இரண்டு விடைகள்;

1. இன்டர்நெட் எக்ஸ்புளோரரை என்னுடைய கணினியில் பயன்படுத்தி பத்து ஆண்டுகள் ஆகப் போகின்றன. மோசில்லா, நெட்ஸ்கேப், பயர்பாக்சுதான் இணையத்துக்கு அழைத்துப் போகின்றன.

2. இன்னும் இன்டர்நெட்டில் வலை உலாவிக் கொண்டிருக்கிறீர்களா, என்ன? பயர்பாக்சையும் தரவிறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள், அது இல்லாமல் எப்படி இணையத்தில் உலாவினோம் என்று ஆச்சரியப்பட ஆரம்பித்து விடுவீர்கள்.

8 comments:

கோபி(Gopi) said...

மா.சிவகுமார்,

தமிழ்விசையை தேடப் போய் அதியனை புடிச்சிட்டீங்க... நல்ல காமெடி :-)

//இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் எப்படி என்று தெரிய வேண்டுமா? //

உமர் தம்பி அவர்கள் உருவாக்கிய UWriterஐப் பயன்படுத்தி தமிழில் தட்டச்சிடலாம். ஆனால் தமிழ்விசை போல உலாவியில் எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சிட முடியாது. UWriterன் தனி சாளரத்தில் தட்டச்சிட்டு பிறகு வேண்டிய இடத்தில் நகலிட்டு ஒட்ட வேண்டும்.

UWriterஐ தரவிறக்க:
http://www.geocities.com/csd_one/TUSetup.zip

ரவிசங்கர் said...

சிவக்குமார், உபுண்டு லினக்சைப் பயன்படுத்தும் எனக்கே இடுகையின் தொடக்கம் குழப்புவது போல் ஆகிவிட்டது. இந்த இடுகையின் சாரம், அதியன், தமிழ்விசை தான். அவை இரண்டையும் சுருக்கமாக எளிமையாக அறிமுகப்படுத்தி இருக்கலாம். இல்லாவிட்டால், புதிதாக வலைப்பதிவோர், கணினி பயன்படுத்துவோருக்குப் பெரும் குழப்பமாகி விடும். இதைப் படிப்போருக்கு இந்த நீட்சிகள் இரண்டும் லினக்சுக்கானது என்று பிழையாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. இவை thunderbird, firefoxக்கானவை என்பதால் எல்லா இயக்குதளங்களிலும் பயன்படும். இனிமேலும், ammaa என்று எழுதி தான் அம்மா வர வைப்போம் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பொருள் இல்லை. தயவு செய்து தமிழ் வலைப்பதிவர் உதவிப் பக்கம் மூலமாவது சிறந்த விசைப்பலகையான தமிழ்99ப் பலரும் கற்க உதவுங்கள்.

எ-கலப்பை பயன்படுத்துபவர்கள் கூட firefoxல் தமிழ் விசை நிறுவிப் பயன்படுத்தலாம். தமிழ் விசையில் கூடுதல் தெரிவுகள் உண்டு.

பிறகு, தமிழ் விசை நீட்சியை முதலில் உருவாக்கியது Voice On Wings. அடுத்தடுத்து முகுந்தும், கோபியும் வந்து மெருகேற்றித் தந்தார்கள். தமிழா! அமைப்பில் இருந்து இயங்கும் கட்டற்ற தமிழ்க் கணிமை குழுவினர் வழுச் சோதனையில் உதவி புரிந்தார்கள்.

மா சிவகுமார் said...

கோபி,

தகவலுக்கு நன்றி.

ரவிசங்கருக்கு,

தெளிவுபடுத்தலுக்கு நன்றி.

கொஞ்சம் சொந்தக் கதையையும் கலந்து எழுதினால்தான் உயிர் வருகிறது. அதுதான் இப்படிக் குழப்பத்தில் முடிந்து விட்டது.

அன்புடன்,

மா சிவகுமார்

உண்மைத் தமிழன் said...

மா.சி. ஸார் என் சோகத்தையும் கொஞ்சம் கேளுங்க ஸார்..

நான் இப்போது டைப் செய்வது inscript method-ல். (Dinamani Typing)

Keyman 3.2-வைப் பயன்படுத்தி win-98-ல் டைப் செய்தேன்.

பின்பு XP என்ற பிசாசு வந்து என் பொழைப்பில் மண் விழுந்தது. (டைப்பிங்தான் நமக்குச் சோறு போடுது ஸார்..) திண்டுக்கல் நண்பர் திரு.துரைப்பாண்டி எனக்காக XP-யில் பயன்படுத்தும்படியான inscript typing keyboard file-ஐ தயார் செய்து கொடுத்தார். அவருடைய பேருதவியால்தான் இன்றுவரை டைப் செய்து வருகிறேன். அவருக்கு எனது நன்றிகள்.

எ-கலப்பையில் எனது inscript Keyboard file உட்கார மறுக்கிறது. நான் தற்போது Keyman 6.0-வைப் பயன்படுத்திதான் டைப் செய்து வருகிறேன்.

முதலில் MS-Word-ல் டைப் செய்து பின்பு அதை Copy செய்து http://www.suratha.com/reader.htm என்ற தளத்திற்கு வந்து அங்கேயிருக்கும் முதல் பாக்ஸில் அதை Paste செய்து பின்பு அதனை TSC முறைக்கு convert செய்து.. convert செய்த text-ஐ Copy செய்து அதை எனது வலைத்தளத்தின் Text Box-ற்கோ, அல்லது பின்னூட்ட Box-ற்கோ கொண்டு சென்று Paste செய்து.. எவ்ளோ பெரிய வேலை பாருங்க.. ரொம்ப இம்சையா இருக்கு ஸார்..

யாராவது, எங்காவது எ-கலப்பையில் inscript typing method keyboard-ஐ வடிவமைத்துத் தருகிறார்களா? இது பற்றிய விவரங்களைச் சற்றுச் சிரமம் பார்க்காமல் எனக்குத் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

எனது email : tamilsaran2002@gmail.com

ரவிசங்கர் said...

சிவக்குமார் - உதவிக் குறிப்புப் பதிவுகளை இயன்ற அளவு சுருக்கமாக வைத்தல் நன்று என்பது என் கருத்து. வந்தவுடன், விசயத்தை அறிந்து கொண்டு போய்க் கொண்டே இருக்கலாம்.

உண்மைத் தமிழன் - உங்க நிலைமை பரிதாபமா இருக்கு :) நீங்க ஒன்னு இலவச, கட்டற்ற, திறம் வாய்ந்த மென்பொருளான உபுண்டு லினக்ஸ் பயன்படுத்தலாம். இதில நீங்க விரும்பும் எல்லா விசைப்பலகை அமைப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இல்லை, Firefoxஐயாவது உங்கள் windows98 கணினியில் நிறுவி எல்லா பணியையும் தமிழ் விசை நீட்சி மூலம் செய்து கொள்ளலாம்.

- உடுக்கை முனியாண்டி said...

மா.சி,
எளிதாக எழுத எண்ணி, குழப்பத்திற்கு வழி வகுத்துவிட்டது. :) எப்படி இருந்தாலும் அதியனுக்கும் தமிழ் விசைக்கும் ஒரு நல்ல அறிமுகம்

ரவி,
தமிழ்விசையை முதலில் ஆரம்பித்தது முகுந்த் என்று நினைக்கிறேன். ஆனால் சூடுபிடித்ததென்னவோ வாய்ஸ் ஆன் விங்ஸ் வந்த பின் என்று ஞாபகம். தவறிருந்தால் தெளிவு படுத்துங்கள்

உண்மைத்தமிழன்,
பயர்பாக்ஸில் பத்மா என்றொரு நீட்சியும் பல்வேறு குறிகளுக்காக கிடைக்கிறது. குறிகளைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது என்பதால், நீங்கள் குறிப்பிடும் குறி அதில் உள்ளதா என்பது தெரியாது. முயற்சி செய்து பாருங்கள்.

Voice on Wings said...

முனியாண்டி கூறியிருப்பது உண்மைதான். தமிழ்விசையை முதன் முதலாகப் பயன்படுத்தியது நான்தான் என்று வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம் :) அல்லது அதுவும் முடியாதோ, என்னவோ. முகுந்த் ஆரம்பித்து வைத்த வேலையில் முதலில் நான் கொஞ்சம் பங்கேற்றேன். பிறகு, கோபி தற்போது அதனை முழூ மூச்சுடன் மேம்படுத்தி வருகிறார் என்று நினைக்கிறேன்.

ரவிசங்கர் said...

தமிழ்விசை தொடக்கம் குறித்து குழப்பியதற்குப் பொறுக்கவும் :( தெளிவுபடுத்தியதற்கு நன்றி, Voice on Wings