தமிழில் தட்டச்சிட அப்படி ஒரு நிலைமைதான் இருக்கிறது.
மேசைத் தளத்துக்கான படங்களை வரையும் மென்பொருளை அடிப்படையாகக் கொண்ட விசைப்பலகை, க்னோம் எனப்படும் மேசைத் தளத்தை அடிப்படையாகக் கொண்ட விசைப்பலகை என்று இரண்டுமே கிடைக்கின்றன.
முதலில் சொன்னதில் தமிழ்99 விசைப்பலகை மட்டும்தான் கிடைக்கிறது. மொசில்லா பயர்பாக்சு, அலுவலக மென்பொருட்கள், உரையாடல் கருவிகள் என்று எல்லாவற்றிலும் (எ-கலப்பை போல) பயன்படும். இதற்காகவே தமிழ்99 உள்ளீட்டு முறையைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
நமக்குத் தெரிந்தது ammaa என்று அடித்து அம்மா என்று வர வைக்கும் அஞ்சல் / தமிங்கில விசைப்பலகை தான் என்றால் மேலே சொன்னது உதவாது.
க்னோமின் உள்ளீட்டுக் கருவியின் மூலம் துரையப்பா வசீகரன் உருவாக்கிய கருவியில்
- அஞ்சல் முறையில் ஒருங்குறி,
- தமிழ்99 முறையில் டிஸ்கி,
- தமிழ்99 முறையில ஒருங்குறி,
- தமிழ்விசைப்பலகை என்ற முறையில் திஸ்கி,
- தமிழ்விசைப்பலகை என்ற முறையில் ஒருங்குறி
நண்பர் பாலபாரதியின் கணினியில் லினக்சை நிறுவும் போது அவர் தமிழ்விசை என்ற பெயரில் ஒரு பயர்பாக்சு நீட்சி கிடைப்பதாகவும் அதைப்பயன்படுத்தி நேரடியாக தமிழில் எழுதலாம் என்று சொல்லியிருந்தார். புதிய மடிக்கணினி வந்ததும், எல்லா மென்பொருளையும் அதிலிருந்தே பயன்படுத்த ஆரம்பித்திருந்தேன். இப்போது இந்த நீட்சியை நிறுவிக் கொள்ளலாம் என்று பாலாவை தொலைபேசிக் கேட்டால், அவர் அதியன் என்ற நீட்சியைத் தேடிப் பிடிக்கச் சொன்னார்.
'பேரை மாத்திட்டாங்களோ' என்று நினைத்துக் கொண்டே அதியனை ஹாய் கோபியின் வலைப்பதிவில் பிடித்து நிறுவிக் கொண்டேன். சரியாக விபரம் பார்க்காமல், பாலாவை நினைத்துக் கொண்டே குறுக்கு வழி விசைகளை அழுத்தினாலும் தமிழில் எழுத்து வர மாட்டேன் என்று அடம் பிடித்தது. வலது புறம் சொடுக்கி விபரம் பார்த்தால் அது பக்கங்களை திஸ்கியிலிருந்து யூனிகோடுக்கும் மாற்றும் நீட்சி.
திரும்ப தொலைபேசியதில், அலுக்காமல் தமிழ் விசை என்பதை நினைவு படுத்திச் சொன்ன பாலாவுக்கு நன்றியுடன் தமிழ் விசையையும் நிறுவிக் கொண்டேன். முகுந்தின் சத்தம் இல்லாத பணிகளில் இன்னொரு பலனுள்ள படைப்பு.
தமிழில் எழுத நீட்சியைத் தேடப் போய் திஸ்கி பக்கங்களைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்து விட்டது. அப்படியே என் பெயரை கூகுளில் தேடியதில் ஆறு ஆண்டுகள் முன்பு எறும்புகள் குழுவின் சார்பில் இணையத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து உரையாடியதின் தொகுப்பு திஸ்கியில் கிடைத்தது, அதை ஒருங்குறிக்கு மாற்றி சேமித்து வைத்துக் கொண்டேன்.
பயர்பாக்சில் தமிழில் எழுத தமிழ்விசை (tamilkey), பயர்பாக்சின் திஸ்கி பக்கங்களை ஒருங்குறியில் படிக்க அதியன். என்ன? பயர்பாக்சு இல்லையா? இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் எப்படி என்று தெரிய வேண்டுமா? இதற்கு இரண்டு விடைகள்;
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரரை என்னுடைய கணினியில் பயன்படுத்தி பத்து ஆண்டுகள் ஆகப் போகின்றன. மோசில்லா, நெட்ஸ்கேப், பயர்பாக்சுதான் இணையத்துக்கு அழைத்துப் போகின்றன.
2. இன்னும் இன்டர்நெட்டில் வலை உலாவிக் கொண்டிருக்கிறீர்களா, என்ன? பயர்பாக்சையும் தரவிறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள், அது இல்லாமல் எப்படி இணையத்தில் உலாவினோம் என்று ஆச்சரியப்பட ஆரம்பித்து விடுவீர்கள்.